Search This Blog

Tuesday, May 12, 2020

நினைவுகளின் பதிப்பு - கால விரயமா?


பாடல் வரிகளையும் பிடித்தமான வாசகங்களையும் ஓர் அழகிய நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா?

இதை நான் ரொம்ப நாளாகவே செய்து வந்த ஒன்றுதான். இவ்வாறு எழுதப்பட்ட நோட்டுப்புத்தகங்கள் மேசை மீது அடுக்கடுக்காய் உள்ளன, தமிழிலும் ஆங்கிலத்திலும். அதோடு மட்டுமா? காலையில் விழித்தெழுந்ததும் கனவுகளை கூட ஞாபகப்படுத்தி எழுதினேனே. எழுத ஆரம்பித்த காலத்தில் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம். அழகான பாடல் வரிகளையும், பொன்மொழிகளையும், கனவுகளையும் எழுத்துக்களால் பொறித்து வைக்கவேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு செய்தேனே. அடைக்கடி அவற்றை எடுத்தும் பார்ப்பேன், எழுத்துக்களின் அழகை ஆராதிப்பேன். 

ஆனால் இவ்வாறு செய்த காலமெல்லாம் இப்போது மலையேறிவிட்டது. படித்தவற்றையும் கேட்பவற்றையும் எழுதி குறித்துக்கொள்வது என்றிருந்த காலம் பார்வையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைவதை நாளடைவில் தான் உணர்ந்துக்கொண்டேன் .  

இப்போது ஆண்டுகள் பல கடந்து விட்டன. பல இடங்களுக்கு சென்று அங்கே சில ஆண்டுகள் வாழ்ந்தும் விட்டேன். பெரும்பாலும் போகின்ற இடங்களுக்கு எழுதி தேக்கி வைத்த ஒரு சில நோட்டு புத்தகங்களையாவது எடுத்துச் செல்வேன். ஆனால் எதையும் எடுத்துவைத்துப் பார்த்த நினைவு எனக்கில்லை. ஏதோ எப்போதாவது பிடித்தமானவை சிலவற்றை எழுதி வந்தேன். துரித வாழ்க்கையின் பிடியிலும், மாறுபட்ட விருப்பு வெறுப்புகளாலும் எழுதுவது குறைந்தது. ஆனால் அந்த ஞாபகம் மட்டும் அவ்வப்போது தலை காட்டாமல் இருந்ததேயில்லை.  இவ்வேளையில் ஒரு நாள் நா. பார்த்தசாரதியின் கபாடபுரத்தைப் படித்து விட்டு அதில் என் மனதை மிகவும் தொட்ட வரிகளை எழுதி வைத்துக்கொண்ட நினைவு, நான் எங்கே அமர்ந்து அவற்றை எழுதினேன், எப்பேற்பட்ட சுழலில் என்பது கூட பளிச்சென நேற்று நடந்தது போலவே நெஞ்சில் எழுகிறது. 

இப்போது என்றோ எழுதி குவித்தவையாவும் மாபெரும் ரூபமெடுத்து நிற்கிறது. எனக்குப் பிறகு, இவையாவும் என்ன ஆவது? நானே இல்லையென ஆன பிறகு இருக்கப்போகிறவர்களுக்கு அவை இட நெருக்கடி ஏற்படுத்திக்கொண்டிருக்காதா? எனது விருப்பு வெறுப்புகளில் பங்கெடுத்துக்கொள்ள யாருக்காவது நேரம் இருக்குமா? விருப்பம் இருக்குமா?

நான் என்றோ எழுத ஆரம்பித்த பாடல்வரிகள் கொண்ட அழகிய சிவப்பு நிற அட்டைகொண்ட நோட்டுப்புத்தகத்தில் முதலில் ஆரம்பிக்கிறேன். 

முதல் ஐந்து பக்கங்களைப் பார்க்கிறேன். ஆமாம், இப்பொழுதும் அவை மனதுக்குப் பிடித்தமான பாடல்கள் தாம். தாள்களை ஒவ்வொன்றாக கிழிக்கிறேன். புத்தகத்தையே ஒரு நாள் கொழுத்திவிட்டு அதன் சாரத்தை மட்டும் இணையத்தில் பதிவேற்றம் செய்தால் என்ன?

கைகள் மும்முரமாக செயல்படத்துவங்கின. சில பக்கங்களை விறுவிறுவென படம் பிடித்தேன். ஸ்கேன் செய்யலாம் ஆனால் ஏனோ நேரம் எடுத்துக்கொண்டு செய்ய மனமில்லை. பழைய நினைவுகளை உள்ளடக்கியிருந்த தாள்களை ஒவ்வொன்றாகக் கிழித்தேன்.  இரண்டு பக்கங்களை மட்டும் முதலில் பதிவேற்றம் செய்ய முனைந்தேன்.










என்ன ஆச்சரியம்? மனதில் எந்த வருத்தமும் ஏற்படவில்லையே! இத்தனை வருடமும் இவற்றை வைத்துக்கொண்டா பொக்கிஷமாக போற்றிவந்தேன்? 


இனி அந்தப் பக்கங்களின் நினைவும் தேவையில்லை. பாடல்களின் பட்டியல் மாத்திரம்... ஏதோ ஓர் ஆசைக்கு ...

No comments:

Post a Comment

நினைவுகளின் பதிப்பு - கால விரயமா?

பாடல் வரிகளையும் பிடித்தமான வாசகங்களையும் ஓர் அழகிய நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? இதை நான் ரொம்ப நாளாகவ...